செங்கோட்டையில் ஆற்றுப்பாலத்தில் சிமெண்டு லாரி மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்தது போக்குவரத்து பாதிப்பு

செங்கோட்டையில் ஆற்றுப்பாலத்தில் சிமெண்டு லாரி மோதி, ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-10-14 23:00 GMT

செங்கோட்டை,

நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு நேற்று முன்தினம் இரவு லாரியில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, விருதுநகரை சேர்ந்த கண்ணன் (வயது 50) என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலையில் செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே உள்ள ஆற்றுப்பாலத்தை நெருங்கியபோது, லாரி திடீரென நிலைதடுமாறியது.

இதனால் ஆற்றுப்பாலத்தில் மோதி, ஆற்றுக்குள் லாரி கவிழ்ந்ததில், சிமெண்டுகள் கட்டு அவிழ்ந்து விழுந்தது. ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் பாதி சிமெண்டு மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்தார். டிரைவர் கண்ணனிடம் விசாரணை நடத்திய போது, மதுபோதையில் லாரியை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அதிகாலையில் இந்த சம்பவம் நடந்த போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் நடக்காமல் தடுக்கப்பட்டது. ஆற்றில் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தும் போது, சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்