வெளிநாடு தப்பி சென்ற வாலிபர் மதுரை விமான நிலையத்தில் கைது

மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் வெளிநாடு தப்பி சென்ற வாலிபர் திரும்பி வந்தபோது மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-10-14 09:43 GMT
ராமநாதபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் கிழக்குத்தெருவை சேர்ந்த சண்முகராஜ் என்பவரின் மகன் மருதுபாண்டி(வயது 26). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மூக்கையூர் சாலை பகுதியை சேர்ந்த தேவி என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சீர் வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுத்தார்களாம். திருமணம் முடிந்த பின்னர் மருதுபாண்டி சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்றுவிட்டாராம்.

இந்தநிலையில் இளம்பெண் தேவியிடம் மருதுபாண்டியின் தந்தை சண்முகராஜ், தாய் ருக்மணி, அக்காள் பாமா, அவரின் கணவர் விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து வீடு, கார் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை கூடுதல் வரதட்சணையாக வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தினார்களாம். இந்த வரதட்சணையை வாங்கி வராததால் தேவியை வீட்டை வீட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் சாயல்குடியில் தனது தந்தை வீட்டில் வசித்து வந்த தேவி இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தபோது மருதுபாண்டி தனது குடும்பத்தினரின் பேச்சை கேட்டுக்கொண்டு வரதட்சணை வாங்கிவரும்படி கூறினாராம். மேலும், சிங்கப்பூரில் இருந்து வந்தபோது மனைவியை பார்க்காமல் பெற்றோர் வீட்டிலேயே இருந்துவிட்டாராம்.

இதனால் மனமுடைந்த தேவி இதுகுறித்து கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மருதுபாண்டி சிங்கப்பூருக்கு தப்பி சென்றுவிட்டாராம். இதனை தொடர்ந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வாலிபர் மருதுபாண்டி சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை மடக்கி பிடித்த அதிகாரிகள் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையிலான போலீசார் மதுரை சென்று மருதுபாண்டியை கைது செய்து திருவாடானை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்