ராசிபுரம், எருமப்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு மாணவி உள்பட 2 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா.

Update: 2017-10-14 09:30 GMT
ராசிபுரம்,

இவர்களது மகள் அர்ச்சனா (வயது 12). சந்திரசேகரபுரம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். அர்ச்சனாவுக்கு ஒரு வாரமாக மர்ம காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிலநாட்கள் சிகிச்சை பெற்றுவந்த அர்ச்சனாவுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருக்கவே அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அர்ச்சனா நேற்று மாலையில் பரிதாபமாக இறந்தாள். மாணவி அர்ச்சனாவின் தந்தையின் சொந்த ஊர் காக்காவேரி அருகிலுள்ள ஜெ.ஜெ.நகர் என்பதால் அர்ச்சனாவின் உடல் அங்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

எருமப்பட்டி அருகே பவித்திரம் கிழக்கு வீதியில் வசித்து வருபவர் பழனிசாமி. இவருடைய மகன் ராஜேஷ் (7). தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டதால் 3 நாட்களாக பவித்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தான். ஆனால் காய்ச்சல் குணமாகாததால் அவனை நாமக்கல் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜா இறந்து விட்டான். ராசிபுரம், எருமப்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு மாணவி உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்