அமித்ஷா மகனை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-10-13 23:18 GMT

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவின் ஜெய்ஷா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அவரை கைது செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி புதுவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முத்தியால்பேட்டை அஜந்தா சந்திப்பு அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:–

பாரதீய ஜனதா ஆட்சி இருக்கும் இடத்தில் எல்லாம் இப்போது காங்கிரஸ் வெற்றிபெற்று வருகிறது. விரைவில் குஜராத்திலும் தேர்தல் வர உள்ளது. அங்கும் ஆட்சியை பிடிப்போம். வருகிற 2019–ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதாவை வீழ்த்த உள்ளோம்.

மதவாத சக்திகளை எதிர்த்து மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்துள்ளோம். மராட்டியத்தில் பாரதீய ஜனதா மந்திரி ஒருவர் குழந்தைகளுக்கு கடலை உருண்டை வழங்குவதில் ரூ.200 கோடி ஊழல் செய்துள்ளார். மத்தியபிரதேசத்தில் வியாபம் ஊழல் நடந்தது. ஆனால் புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் எதுவுமே நடக்காத நிலையில் கவர்னர் கிரண்பெடி ஊழல் நடந்தது என்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் அங்கு அதானிக்கு நிலக்கரி சுரங்கம் பெற்றுத்தருகிறார். பெரும் முதலாளிகளுக்காக கடன் தர மட்டுமே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை திறந்துவைத்துள்ளனர்.

இவ்வாறு லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்–அமைச்சர் ராமச்சந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் வினாயகமூர்த்தி, ஏ.கே.டி.ஆறுமுகம், தேவதாஸ், நீல.கங்காதரன், ஏழுமலை, வின்சென்ட்ராஜ், தனுசு, கருணாநிதி, பிரேமலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்