நாந்தெட் மாநகராட்சி தேர்தல் முடிவு ‘பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என்ற செய்தியை உணர்த்துகிறது’ சிவசேனா காட்டம்

நாந்தெட் மாநகராட்சி தேர்தல் முடிவு பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என்ற செய்தியை உணர்த்துவதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

Update: 2017-10-13 22:56 GMT
மும்பை, 

81 உறுப்பினர்களை கொண்ட நாந்தெட்- வகாலா மாநகராட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது. நேற்று காலை இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் 73 இடங்களை கைப்பற்றி நாந்தெட் மாநகராட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது.

இந்த தேர்தல் முடிவு பாரதீய ஜனதாவுக்கு எதிர்பாராத அடியாக விழுந்தது. அக்கட்சி, ஒற்றை இலக்கத்தில், அதாவது வெறும் 6 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. சிவசேனா ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று ஆறுதல் தேடிக்கொண்டனர்.

இந்த நிலையில், நாந்தெட் மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதாவின் படுதோல்வியை விமர்சித்து, கூட்டணி கட்சியான சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகையில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில் கூறி இருப்பதாவது:-

கவுரவ பிரச்சினை

நாந்தெட் மாநகராட்சி தேர்தலில், ஒருபக்கம் அசோக் சவானின் காங்கிரஸ், மற்றொரு பக்கம் பா.ஜனதா என இரு முனைகளை சிவசேனா எதிர்கொண்டது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் பா.ஜனதா கையாண்டது. அதே வேளையில், சாதியை வைத்து அரசியல் செய்வதில் சிவசேனாவுக்கு உடன்பாடு இல்லை.

தேர்தல் பிரசார களத்தில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது மந்திரிசபை சகாக்கள் என அனைவரையும் களமிறக்கி, தேர்தலை கவுரவ பிரச்சினையாகவே பா.ஜனதா மாற்றிவிட்டது. எனினும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியால் அழிக்கப்பட்டது போல், நாந்தெட்டிலும் பா.ஜனதா அழிந்துவிட்டது.

தோற்கடிக்க முடியும்

காங்கிரஸ் இல்லாத தேசத்தை படைக்க வேண்டும் என்ற கனவுடன் மிதக்கும் எங்கள் நண்பருக்கு (பா.ஜனதா), நாந்தெட் தேர்தல் முடிவு நிச்சயமாக அதிர்ச்சி அளித்திருக்கும். இந்த முடிவு மூலம் ஒட்டுமொத்த தேசத்துக்கும் உணர்த்தக்கூடிய செய்தி என்னவென்றால், “பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும்” என்பதே.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்