ஆக்கிரமித்து கட்டப்பட்ட நெல்பேட்டை புறக்காவல்நிலையத்தை அகற்றக்கோரி வழக்கு கலெக்டர், மாநகராட்சி கமி‌ஷனர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஆக்கிரமித்து கட்டப்பட்ட நெல்பேட்டை புறக்காவல்நிலையத்தை அகற்றக்கோரி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

Update: 2017-10-13 22:50 GMT

மதுரை,

மதுரையைச் சேர்ந்த ஜாகீர்உசேன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

மதுரை நெல்பேட்டை பகுதியானது போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி. இந்த பகுதியைச் சுற்றி மருத்துவமனைகள், சந்தைகள் அமைந்துள்ளதால், எப்போதும் ஜன நெருக்கடி மிகுந்து இருக்கும். இந்தநிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பகுதியில் 15 அடி நிலத்தை ஆக்கிரமித்து நெல்பேட்டை புறக்காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெறாமல், மின் இணைப்பு, பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனை அகற்றக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. சட்டம் என்பது சாமானியனுக்கும், அதிகாரிகளுக்கும் சமமானது தான். எனவே முறையான அனுமதியின்றி மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் புறக்காவல் நிலையத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலித்து 2 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க, மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமி‌ஷனர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்