கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதரின் உடல் நாளை இந்தியா கொண்டு வரப்படுகிறது

கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் உடல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்தியா கொண்டு வரப்படுகிறது.

Update: 2017-10-13 23:15 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 49). பிரபல ரவுடியான இவர் 5 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 48 வழக்குகள் நிலுவையில் இருந்தது. போலீசார் அவரை தேடியபோது அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள ஸ்ரீதரின் வீடு, காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே எல்லப்பா நகரில் இருக்கும் அவரது வீடு உள்பட பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை போலீஸ் முடக்கியது.

ஸ்ரீதரின் மனைவி குமாரி, மகன் சந்தோஷ்குமார் மற்றும் ஸ்ரீதரின் நெருங்கிய கூட்டாளிகளிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் ‘சயனைடு’ சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. அவரது மகள் தனலட்சுமி மற்றும் அவரது வக்கீல்கள் கம்போடியா விரைந்து சென்று ஸ்ரீதரின் இறப்பை உறுதி செய்தனர்.

தந்தையின் உடலை இந்தியா எடுத்து வருவது தொடர்பாக தனலட்சுமி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு பரிந்துரை செய்தது.

ஸ்ரீதரின் உடல் எப்போது இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்பது பற்றி கம்போடியாவில் உள்ள ஸ்ரீதரின் வக்கீல் மலையூர் வி.புருஷோத்தமனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:–

கம்போடியா அரசிடம் ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஆணைகளையும் பெற்றுவிட்டோம். மேலும் சரக்கு விமானத்தில் கொண்டு வருவதற்கான விமான டிக்கெட்டுகளையும் எடுத்து விட்டோம்.

விமானத்தில் உடலை எடுத்து வருவதற்கான ‘பேக்கிங்’ வேலைகள் நடந்து வருகிறது. இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு சரக்கு விமானத்தில் புறப்பட்டு மலேசியா வழியாக நாளை இந்தியாவுக்கு கொண்டுவர உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சீபுரம் போலீசார் கூறுகையில், ‘‘உடல் இங்கு வந்ததும் அதை கைப்பற்றி, தற்கொலை செய்து கொண்டவர் ரவுடி ஸ்ரீதர்தானா? என்பதை மரபணு சோதனை மூலம் உறுதி செய்த பிறகே அதுபற்றி அறிவிப்போம்’’ என்றனர்.

மேலும் செய்திகள்