வைர வியாபாரி மகனை கடத்தி கொலை செய்த எம்.பி.ஏ. பட்டதாரிக்கு ஆயுள் தண்டனை
வைர வியாபாரி மகனை கடத்தி கொலை செய்த எம்.பி.ஏ. பட்டதாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
மும்பை கிர்காவை சேர்ந்த வைரவியாபாரி ஜிதேந்திரா. இவரது மனைவி சந்திரிகா. இந்த தம்பதிக்கு 13 வயதில் ஆதித்யா என்ற மகன் இருந்தான். இவன் கடந்த 2013-ம் ஆண்டு மே 13-ந்தேதி கடத்தி கொலை செய்யப்பட்டான். பன்வெல் அருகே அவனது உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், ஜிதேந்திராவின் உறவினரான ஹிமான்சு ரங்கா, அவரது நண்பர் விஜேஷ் சங்வி(வயது33) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களில் விஜேஷ் சங்வி எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார்.
பணம் பறிக்க சதி
விசாரணையில் அவர்கள் தான் சிறுவன் ஆதித்யாவை கடத்தி கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் ஹிமான்சு ரங்கா, விஜேஷ் சங்வி இருவருக்கும் 10 லட்சத்திற்கும் மேல் கடன் இருந்தது. அந்த தொகையை திருப்பி கொடுப்பதற்கு பணம் இல்லாமல் திணறி வந்தனர். இந்தநிலையில், அவர்கள் சிறுவன் ஆதித்யாவை கடத்தி ஜிதேந்திராவிடம் பணம் பறிக்க சதி திட்டம் தீட்டினர்.
அதன்படி சம்பவத்தன்று ஹிமான்சு சிறுவன் ஆதித்யாவை மோட்டார்சைக்கிளில் வெளியே அழைத்து செல்வதாக கூறி கடத்தினார். பின்னர் அவனை விஜேஷ் சங்வியிடம் ஒப்படைத்தார். தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக ஜிதேந்திராவின் வீட்டிற்கு வந்து இருந்து கொண்டார். இந்த நிலையில், ரூ.30 லட்சம் கேட்டு ஜிதேந்திராவிற்கு விஜேஷ் சங்வியிடம் இருந்து மிரட்டல் அழைப்பு வந்தது.
குற்றவாளி
இதனால் பதறிப்போன ஜிதேந்திராவின் குடும்பத்தினர் வி.பி.ரோடு போலீசில் புகார் கொடுத்தனர். இதுபற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதனால் பயந்து போன ஹிமான்சு இது குறித்து விஜேஷ் சங்விக்கு போன் செய்து கூறினார். பின்னர் இருவரும் சிறுவனை கொலை செய்து உடலை பன்வெல் பகுதியில் வீசினர்.
இந்த தகவல் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்து அண்மையில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது விஜேஷ் சங்வியை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.
ஆயுள் தண்டனை
நேற்றுமுன்தினம் அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. சிறுவனை கடத்தியது மற்றும் கொலை செய்த குற்றங்களுக்காக தலா ஒரு ஆயுள் தண்டனையும், பணம் கேட்டு மிரட்டியது, தடயங்களை அழித்தது ஆகிய குற்றங்களுக்காக தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார். குற்றவாளி விஜேஷ் சங்வி 7 ஆண்டு சிறை தண்டனைகளை ஒரே நேரத்திலும், பின்னர் ஆயுள் தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அவருக்கு ரூ.9 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஹிமான்சு மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால் இந்த வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.