திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் சாவு
திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் சாவு, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள நெடுஞ்சேரி கிராமம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவர். இவரது மகன் ரித்தீஷ் (வயது 7). திருமழிசையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 10–ந்தேதியன்று ரித்தீசுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோர் உடனடியாக தண்டலம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ரித்தீசை அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரித்தீஷ் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனான்.
இது குறித்து ராஜா வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.