பெங்களூருவில் மழைக்கு 5 பேர் பலி 5 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
பெங்களூருவில் நேற்று இரவு 7 மணி அளவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழைக்கு கோவில் அர்ச்சகர் உள்பட 5 பேர் பலியாகினர்.
பெங்களுரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
பெருக்கெடுத்து ஓடியது
இதனால் பெங்களூருவில் கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த போதிலும், இன்னும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் கனமழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று பகலில் லேசான வெயில் அடித்தது. மாலையில் கருமேகங்கள் ஒன்றுகூடின. இரவு 7 மணியளவில் பயங்கர இடி- மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. நேரம் ஆக ஆக மழையின் வேகம் அதிகமானது. ஒரு மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. ராஜாஜிநகர், மல்லேசுவரம், ஸ்ரீராமபுரம், குருபரஹள்ளி, மெஜஸ்டிக், ஜெயநகர், மடிவாளா, கார்ப்பரேஷன் சர்க்கிள் மற்றும் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சேஷாத்திரிபுரம் சுரங்கப்பாதையில் ஆள் உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றது. அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நடைபாதை சரிந்தது
யஷ்வந்தபுரம் பி.எம்.டி.சி. பஸ் நிலையத்திற்குள் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. இதனால் பஸ்கள் அந்த பஸ் நிலையத்திற்குள் வராமல் வெளியே நின்று சென்றன. இதனால் அங்கு வந்த பயணிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாயினர். ராஜாஜிநகர் 5-வது பிளாக்கில் ராஜ்குமார் சாலையில் கால்வாயில் அதிக தண்ணீர் ஓடியதால், கட்டிட சுவர் இடிந்துவிழுந்தது.
மேலும் அந்த ரோட்டில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள நடைபாதையும் சரிந்து விழுந்தது. அத்துடன் நடைபாதை தடுப்பு கம்பிகள் பெயர்ந்தன. நடைபாதை வழியாக வெளியேறிய தண்ணீர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் புகுந்தது. மேலும் நடைபாதையை ஒட்டியுள்ள ஓட்டலின் சுரங்க அறைக்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் தண்ணீரில் மிதந்தன.
5 ஆயிரம் வீடுகளில் மழைநீர் புகுந்தது
அதேப் போல் நாயண்டஹள்ளியில் விருசபாவதி நதியில் தண்ணீர் மேலே வந்து சாலையில் ஓடியது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குருபரஹள்ளியில் அதிக மழை பெய்ததால் அங்குள்ள கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள வெங்கேடஷ்வரசாமி கோவில் அர்ச்சகர் வாசுதேவ் கால்வாயில் அடித்து செல்லப்பட்டார். அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ மழைநீரில் அடித்து செல்லப்பட்டன. இதை அங்கு இருந்த நேரில் பார்த்தவர்கள் கூறினர். அதே பகுதியில் 18-வது கிராசில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. பெங்களூருவில் நேற்று பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதில் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தது. மழைநீர் புகுந்த வீடுகளில் வசித்தவர்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல்லாரி ரோட்டில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியது. அங்கு போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.
5 பேர் பலி
இதில் அந்த வீட்டில் இருந்த தம்பதி சங்கரப்பா, கமலம்மா ஆகிய 2 பேர் மரணம் அடைந்தனர். கனமழைக்கு நவ்ரங் சர்க்கிளில் தண்ணீர் இடுப்பு அளவுக்கு தேங்கியதால், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. மெஜஸ்டிக்கில் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்திலும் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இதேப்போல் பீனியா அருகே உள்ள லக்கரே பகுதியை சேர்ந்த மீனாட்சி மற்றும் அவரது மகள் புஷ்பா ஆகிய 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. மொத்தத்தில் நகரில் நேற்று பெய்த மழைக்கு தாய்-மகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று இரவே மாநகராட்சி ஊழியர்களும், அரசு ஊழியர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.