பிரதமரை தரக்குறைவாக பேசியதாக மந்திரி ரோஷன் பெய்க்கிற்கு பா.ஜனதா கடும் கண்டனம்
தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பிரதமரை தரக்குறைவாக பேசியதாக மந்திரி ரோஷன் பெய்க்கிற்கு கர்நாடக பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக நகர வளர்ச்சித்துறை மந்திரியாக இருப்பவர் ரோஷன் பெய்க். இவர் பெங்களூரு புலிகேசிநகர் பகுதியில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அவர் தனக்கு தெரிந்த அரைகுறை தமிழிலேயே பேசினார்.
அவர் பேசும்போது, “பிரதமராக மோடி பதவி ஏற்றபோது மக்கள் அவரை மண்ணின் மைந்தன் என்று கூறினார்கள். ஆனால் இப்போது என்ன நடந்துள்ளது? அவர் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தார். இப்போது அவரை அதே மக்கள் திட்டுகிறார்கள்.(அப்போது பிரதமரை பற்றி அவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.)
பா.ஜனதா கடும் கண்டனம்
அவர்கள் காங்கிரசார் அல்ல. குஜராத், மராட்டிய மக்கள் தான் பிரதமரை விமர்சிக்கிறார்கள். அவர்கள் தான் பாராளுமன்ற தேர்தலின்போது மோடியை ஆதரித்தனர்” என்று பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு அடங்கிய வீடியோ காட்சி கன்னட செய்திக் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரை விமர்சித்து பேசிய மந்திரி ரோஷன் பெய்க்கிற்கு கர்நாடக பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில், “நாட்டின் பிரதமரை அவமதிக்கும் விதத்தில் மந்திரி ரோஷன் பெய்க் பேசியுள்ளார். இது நாட்டுக்கே இழைக்கப்பட்ட அவமானம். எனவே உடனடியாக மந்திரிசபையில் இருந்து ரோஷன் பெய்க்கை நீக்க வேண்டும். ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டதால் மந்திரி ரோஷன் பெய்க் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது அவருடைய பேச்சின் மூலம் அறிய முடிகிறது. நாக்கு தான் ஒரு நபரின் பண்பை வெளிப்படுத்துகிறது. பொது இடத்தில் பேசும்போது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு பதவி ஏற்றவர்கள் இவ்வாறு பேசக்கூடாது. ரோஷன் பெய்க் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்“ என்றார்.
வரம்பு மீறி பேசக்கூடாது
ஜனதா தளம்(எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடா கூறுகையில், “மந்திரி ரோஷன் பெய்க், உணர்ச்சி மிகுதியில் பேசி இருக்கிறார். பிரதமர் பற்றி அவர் கூறிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அதை நான் நிராகரிக்கிறேன். யாரும் வரம்பு மீறி பேசக்கூடாது. பிரச்சினைகளை தான் பேச வேண்டும். பேசும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டியது அவசியம்“ என்றார்.