வாணியம்பாடி அருகே தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி

வாணியம்பாடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2017-10-13 23:00 GMT
வாணியம்பாடி,

தமிழக எல்லையோரம் உள்ள ஆந்திர மாநில வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலாற்றுக்கு செல்லும் காட்டாற்றின் குறுக்கே தமிழக - ஆந்திர எல்லையை இணைக்கும் வீரணம்மலை தரைப்பாலம் உள்ளது. புளியமரத்துபெண்டா அருகே உள்ள இந்த தரைப்பாலம் இருமாநில மக்களும் சென்று வரும் முக்கிய பாலம் ஆகும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வாணியம்பாடி மற்றும் ஆந்திர மாநில எல்லை கிராம பகுதிகளில் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் அந்த தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. இது யாருக்கும் தெரியவில்லை.

மழை நின்ற பின்பு இரவு 12 மணி அளவில் வாணியம்பாடியில் இருந்து வீரணம்மலைக்கு மோட்டார் சைக்கிளில் வெலதிகாமணிபெண்டாவை சேர்ந்த சூர்யா (வயது 15). தேவராஜபுரத்தை சேர்ந்த கோவிந்தன் (25), வீரணம்மலையை சேர்ந்த முருகன் (30), ஆம்பூர் பெரியாங்குப்பத்தை சேர்ந்த ரஷீத் (56), புல்லாக்குட்டையை சேர்ந்த ராஜேந்திரன் (45) ஆகியோர் 3 மோட்டார் சைக்கிள்களில் சென்றனர்.

புளியமரத்துபெண்டா அருகே மோட்டார் சைக்கிள்களில் சென்றபோது அப்பகுதியில் இருந்த தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இருப்பது தெரியாமல் 15 அடி பள்ளத்தில் விழுந்தனர். ஒவ்வொரு மோட்டார் சைக்கிளும் ஒன்றன் பின் ஒன்றாக கீழே விழுந்தது. அந்த சமயத்தில் வீரணம்மலையில் இருந்து வாணியம்பாடி நோக்கி சகாதேவன் என்பவர் ஓட்டிவந்த மினிலாரியும் அதே பள்ளத்தில் விழுந்தது.

இதனையடுத்து காட்டாற்று வெள்ளத்தில் அனைவரும் அடித்து செல்லப்பட்டனர். இதில் கோவிந்தன், ரஷீத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்பலூர் போலீசார் மற்றும் வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களின் உதவியுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சூர்யா, முருகன், ராஜேந்திரன், சகாதேவன் ஆகிய 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் தீயணைப்பு துறையினர், போலீசார் பள்ளத்தில் கிடந்த 3 மோட்டார் சைக்கிள்கள், லாரியை மீட்டு அம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் புளியமரத்துபெண்டா, வெலதிகாமணிபெண்டா, வீரணம்மலை, தேவராஜபுரம், மாதகடப்பா, ராமகுப்பம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.

வாணியம்பாடி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையாலும், பாலாற்று வெள்ளப்பெருக்காலும் நேற்று புல்லூர் தடுப்பணை தனது கொள்ளளவைவிட 10 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் அம்பலூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், பாலாற்று வழியாக வந்த தண்ணீர் அம்பலூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தது.

தொடர்ந்து வாணியம்பாடி பகுதியில் வெள்ளம் வருவதால் பாலாற்று பகுதியில் குடியிருப்போர் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாலாற்றை ஒட்டியுள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. 

மேலும் செய்திகள்