என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை: முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்து

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் குறித்து பேச அதிகாரிகள் யாரும் வராததால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

Update: 2017-10-13 23:00 GMT
புதுச்சேரி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதை என்.எல்.சி. நிர்வாகம் அமல்படுத்தவில்லை.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி புதுவை ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய தொழிலாளர் துறை உதவி ஆணையரை சந்தித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனை தொடர்ந்து உதவி ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி. தரப்பில் இருந்து அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 27-ந் தேதி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்பிறகும் என்.எல்.சி. நிர்வாகம் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வருகிற 16-ந் தேதி சென்னையில் உள்ள மத்திய தொழிலாளர் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து புதுவை ரெட்டியார்பாளையத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அரசு சார்பில் உதவி ஆணையர் கணேசன், தொழிலாளர்கள் தரப்பில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், ஜீவா தொழிற் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி, சிறப்பு தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் கல்யாணசுந்தரம், அலுவலக செயலாளர் திருஞானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் என்.எல்.சி. நிர்வாக தரப்பில் இருந்து அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் கூறியதாவது:-

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு நிர்ணயத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க என்.எல்.சி. நிர்வாகம் மறுக்கிறது. மத்திய தொழிலாளர் துறை உதவி ஆணையர் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு 2 முறை அழைப்பு விடுத்தார். ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் 2 முறையும் யாரும் கலந்து கொள்ளவில்லை. எனவே இன்று (நேற்று) நடைபெற இருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு என்.எல்.சி. நிர்வாகம் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்