திருப்பூரில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் பாய்ந்ததால் பரபரப்பு

திருப்பூரில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-10-13 23:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதியில் இருந்து நொய்யல் ஆற்றில் கலக்கும் சிறிய சாக்கடை கால்வாயில் நேற்று காலை சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் பாய்ந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருப்பூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அதிகாரிகள் சென்ற நேரத்தில் சாயக்கழிவுநீர் அங்கு பாயவில்லை. இருப்பினும் அந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் இளங்குமரன் கூறும்போது, நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் செல்வதாக தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அங்கு ஆய்வுக்கு சென்றனர். ஆனால் அதிகாரிகள் சென்ற நேரத்தில் அங்கு சாயக்கழிவுநீர் செல்லவில்லை. சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் பாய்ந்தால் பொதுமக்கள் உடனடியாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாநகரம் முழுவதும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பல லட்சம் ரூபாய் செலவில் நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வரும் நேரத்தில், சாயக்கழிவுநீர் சென்ற சம்பவத்தால் நேற்று காலை அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்