ஓமலூர் அருகே மர்மமான முறையில் இறந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு மிரட்டல்

ஓமலூர் அருகே மர்மமான முறையில் இறந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு செல்போனில் மிரட்டல் விடுப்பதாக இன்ஸ்பெக்டர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-10-13 23:00 GMT
சேலம்,

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் மாரியப்பன். இவர், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரியவடுகம்பட்டியை சேர்ந்தவர். இவரது கார் மீது அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 22) என்பவரது மோட்டார் சைக்கிள் கடந்த ஜூன் மாதம் மோதியது. அதன்பிறகு சதீஷ்குமார் மர்மமான முறையில் ரெயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தங்களது குடும்பத்தினருக்கு மாரியப்பனிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், எனவே, தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சதீஷ்குமாரின் தாயார் முனியம்மாள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்தநிலையில், சதீஷ்குமாரின் தாய் முனியம்மாள், இவரது மகள் சங்கீதா ஆகியோர் நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். பின்னர், அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனை சந்தித்து தீவட்டிப்பட்டியில் இதற்கு முன்பு இன்ஸ்பெக்டராக இருந்த ரஜினிகாந்த் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து முனியம்மாள், சங்கீதா ஆகியோர் கூறியதாவது:-

மர்மமான முறையில் சதீஷ்குமார் இறந்தது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசில் ஏற்கனவே புகார் செய்தோம். ஆனால் அவர்கள் புகார் மனுவை ஏற்கவில்லை. பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் மீது புகார் கொடுத்ததால் தொடர்ந்து எங்களது குடும்பத்தினருக்கு மிரட்டல் வருகிறது. தீவட்டிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இதனால் தீவட்டிப்பட்டியில் இதற்கு முன்பு இன்ஸ்பெக்டராக இருந்த ரஜினிகாந்த் தற்போது, தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்து வருகிறார். எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீவட்டிப்பட்டியில் இன்ஸ்பெக்டராக இருந்த ரஜினிகாந்த் தற்போது சேலம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் யாரையும் மிரட்டவில்லை. இது முற்றிலும் தவறானது. சதீஷ்குமாரின் தாய் முனியம்மாள், அவரது மகள் சங்கீதா ஆகியோர் தேவையில்லாமல் என் மீது புகார் தெரிவித்துள்ளனர், என்றார். 

மேலும் செய்திகள்