மரக்கன்றுகளுடன் த.மா.கா.வினர் நூதன ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் 2-வது குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Update: 2017-10-13 22:15 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் 2-வது குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவில்பட்டி மெயின் ரோடு, கிழக்கு பார்க் ரோடு, மேற்கு பார்க் ரோடு, ஏ.கே.எஸ். தியேட்டர் ரோடு உள்ளிட்ட சாலைகளில் பள்ளம் தோண்டி, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. பின்னர் அங்கு புதிய சாலைகள் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. ஆனாலும் குடிநீர் திட்ட பணிகளை காரணம் காட்டி, இதுவரையிலும் புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தவமணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டார தலைவர்கள் இம்மானுவேல், ஆழ்வார்சாமி, மாவட்ட துணை தலைவர்கள் ரசாக், முத்துசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி, நகர துணை தலைவர் காளிபாண்டியன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். குண்டும்-குழியுமான சாலைகளில் மரக்கன்றுகளை நடலாம் என்பதை வலியுறுத்தும் வகையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தென்னை, வாழை மரக்கன்றுகளை கைகளில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி, நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்