சென்னை முகப்பேரில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
சென்னை முகப்பேரில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். அவனது உடலுக்கு அமைச்சர் பெஞ்சமின், அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினர்.
அம்பத்தூர்,
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட முகப்பேர் மேற்கு 3-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 39). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய கணவர் ராதாகிருஷ்ணன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
மலர்கொடி தனது மகள், மகனுடன் வசித்து வருகிறார். மகள் சந்தியா (13) பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் சந்தோஷ் (11) அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
டெங்கு காய்ச்சலால் சாவு
சந்தோஷ், கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதற்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். ஆனால் காய்ச்சல் மேலும் அதிகமானதால் அவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவனை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதற்காக அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி மாணவன் சந்தோஷ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தான்.
டெங்கு காய்ச்சலால் உயிர் இழந்த மாணவன் சந்தோஷ் உடலுக்கு அமைச்சர் பெஞ்சமின், அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி மாணவனின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.