அறிவிக்கப்படாமல் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

அறிவிக்கப்படாமல் அரசு பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2017-10-13 15:00 GMT
மன்னார்குடி,

மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. அரசு பஸ்சில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

நீண்ட நாட்களாக மன்னார்குடி பகுதியில் பஸ் வசதி குறித்து பொதுமக்கள் பல்வேறு குறைகளை தெரிவித்து வந்தனர். பஸ் பயணிகளிடம் குறைகளை கேட்டறிவதற்காக மன்னார்குடி-புதுக்குடி செல்லும் பஸ்சில் மன்னார்குடி பஸ் நிலையத்தில் இருந்து பயணம் செய்தேன். அப்போது பொதுமக்கள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். நான் பயணம் செய்த அந்த பழைய பஸ்சில் ஒரு சில இருக்கைகள் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டியது மட்டுமல்லாமல், மேற்கூரை சேதமடைந்துள்ளதாகவும், மழைக்காலங்களில் எந்தவொரு இருக்கையிலும் அமர முடியாமல் மழையில் நனைந்து செல்ல வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த குறைகளை நிவர்த்தி செய்ய அரசு போக்குவரத்து கழக மன்னார்குடி கிளை மேலாளரிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது மன்னார்குடி-தேவங்குடி- கருவேலங்குளம் வழியாக கற்கோவிலுக்கு பஸ் இயக்கவும், பொதக்குடி மார்க்கத்தில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். மன்னார்குடி-கும்பகோணம் செல்லும் பஸ்கள் தட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லவும், மாணவ-மாணவிகள் பயனடையும் வகையில் காலை மற்றும் மாலை வேளைகளில் மன்னார்குடி பஸ் நிலையத்தில் இருந்து மன்னார்குடி அரசு கலைக்கல்லூரிக்கும் பஸ் இயக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

மேலும், மன்னார்குடி பணிமனையில் உள்ள சேதமடைந்த பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் இயக்கவும், அரசு அறிவிக்காமலேயே அரசு பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்