தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிகிச்சை குறித்து கலெக்டர் ஆய்வு

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிகிச்சை குறித்து கலெக்டர் விவேகானந்தன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2017-10-13 10:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பிடமனேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் விவேகானந்தன் நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றவும், கழிவுநீர் கால்வாய்களை தூய்மையாக பராமரிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

அந்த பகுதியில் தனியார் கிளனிக் அருகே சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய டயர்களை அகற்ற ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில் அவை அகற்றப்படாமல் இருந்தன. 24 மணிநேரத்தில் அவற்றை அங்கிருந்து அகற்றவும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் தடங்கம் ஊராட்சியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொசு ஒழிப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்கினார். பழைய பிளாஸ்டிக் பொருட்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், தினமும் கொசுமருந்து அடிக்கவும், நிலவேம்பு குடிநீரை சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தினார். தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் டெங்குகாய்ச்சல் தடுப்பு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் காய்ச்சல் பிரிவு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜூ, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுரபி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்