பெங்களூருவில் ஏ.டி.எம். மையங்களில் ரூ.72 லட்சம் கொள்ளை
பெங்களூருவில் ஏ.டி.எம். மையங்களில் ரூ.72 லட்சம் தனியார் நிறுவன அதிகாரியால் கொள்ளையடிக்கப்பட்டது.
பெங்களூரு,
பெங்களூரு கமர்சியல் தெரு பகுதியில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம், வங்கிகளிடம் இருந்து பணத்தை பெற்று, அதனை அந்த வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தில் கே.ஜி.ஹள்ளியை சேர்ந்த ஜான்சன்(வயது 24) என்பவர் அதிகாரியாக வேலை செய்து வந்தார். அவருக்கு, ஒரு தனியார் வங்கிக்கு சொந்தமான 11 ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பொறுப்பை தனியார் பாதுகாப்பு நிறுவனம் வழங்கி இருந்தது.
இந்த நிலையில், ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு இருந்த ஜான்சன் தன்னிடம் இருந்த சாவியை பயன்படுத்தி, ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணத்தை கையாடல் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி தனியார் பாதுகாப்பு நிறுவன உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே ஜான்சனை உயர் அதிகாரிகள் கண்டித்ததுடன், இதுபோன்று பணத்தை கையாடல் செய்தால் வேலையை விட்டு நிறுத்தி விடுவோம் என்று எச்சரித்துள்ளனர்.
ரூ.72 லட்சம் கொள்ளை
இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் டிஸ்பான்சரி ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் மட்டும் ரூ.61 லட்சத்தையும், மற்ற ஏ.டி.எம்.மையங்களில் ரூ.11 லட்சத்தையும் தனது நண்பருடன் சேர்ந்து கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகி விட்டார். இதுபற்றி தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு தெரியவந்தது. உடனே அவர்கள் கமர்சியல் தெரு போலீஸ் நிலையத்தில் ஜான்சன் மீது புகார் கொடுத்தார்கள். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்சனை தேடிவந்தனர்.
இந்த நிலையில், ஏ.டி.எம். மையங்களில் ரூ.72 லட்சத்தை கொள்ளையடிக்க உதவியதாக ஜான்சனின் நண்பரான அல்சூரை சேர்ந்த கார்த்திக்(27) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பணத்துடன் தலைமறைவாக உள்ள ஜான்சனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.