டெங்கு காய்ச்சல் இறப்பு குறித்து அரசு தவறான தகவல்களை பரப்புகிறது

டெங்கு காய்ச்சல் இறப்பு குறித்து தமிழக அரசு தவறான தகவல்களை பரப்புகிறது என்று த.மா.கா. இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2017-10-12 22:45 GMT
ஈரோடு,

தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா தலைமை தாங்கி, பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் அலட்சிய போக்கால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 11 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் இறந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு இதுகுறித்து தவறான தகவலை பரப்பி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக த.மா.கா. சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தற்போது 2-ம் கட்டமாக 2 ஆயிரத்து 500 இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட உள்ளது.

விழிப்புணர்வு பிரசாரம்

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். கெயில் எரிவாயு திட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு சாதகமாக மாநில அரசு செயல்படுகிறது. எனவே இதுகுறித்து வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 7 மாவட்டங்களில் த.மா.கா. சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு உள்ள வாட் வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், ஈரோடு மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர்கள் பிரகாஷ், மாயா, ரத்தீஸ், தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். 

மேலும் செய்திகள்