ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு கண்காணிப்பு கேமராவில் மர்ம நபரின் உருவம் சிக்கியது

ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கி முன் நிறுத்தி இருந்த ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. திருடிய மர்ம நபரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது. அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2017-10-12 23:15 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 49). ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வங்கிக்கு பணம் எடுக்க சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளை வங்கி முன் நிறுத்திவிட்டு சென்றார். அவசரமாக சென்றதால், மோட்டார் சைக்கிளின் சாவியை எடுக்க மறந்து விட்டார்.

தாமோதரன் வங்கிக்குள் சென்றதையும், அவரது மோட்டார் சைக்கிளின் சாவி அங்கேயே இருப்பதையும் ஒரு மர்ம நபர் பார்த்து கொண்டே இருந்தார். பின்னர் அவர் வங்கிக்குள் தாமோதரன் என்ன செய்கிறார் என்பதை வாசல் அருகே சென்று உற்றுப்பார்த்தார். அங்கு அவர் தீவிரமாக பணம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதை கண்டார்.

இதனால் தாமோதரன்  உடனே வெளியே வரமாட்டார் என்பதை தெரிந்து கொண்ட அந்த மர்ம நபர், தாமோதரன் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு சென்றார்.

சுமார் 10 நிமிடத்திற்கு பிறகு வங்கி பணிகள் முடித்து வெளியே வந்த தாமோதரன் அங்கு தனது மோட்டார் சைக்கிள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் மோட்டார் சைக்கிளிலேயே சாவியையும் வைத்து சென்றதை அறிந்தார்.

இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் வங்கிக்கு சென்று விசாரித்தனர். அங்கு ரகசிய கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதை அறிந்த போலீசார், அதில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தனர். அப்போது தாமோதரனின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்ததை கண்டனர்.

அதனை கைப்பற்றிய போலீசார் அதில் உள்ள காட்சிகள் மூலம் மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, “கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெளிவாக உள்ளதால் மோட்டார் சைக்கிள் திருடன் விரைவில் பிடிபடுவான்“ என்றனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்