தஞ்சை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

தஞ்சை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2017-10-11 00:43 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரி மகேந்திரன் தலைமையில் உதவி அலுவலர் ஜோஸ்பின், தஞ்சை லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், தமிழ்ச்செல்வி, பத்மாவதி மற்றும் போலீசார் நேற்று மாலை 4.45 மணிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்த அறைக்கதவையும், வெளிப்புறத்தில் உள்ள இரும்புக்கதவையும் சாத்தினர். பின்னர் அங்கிருந்த பத்திரப்பதிவு அலுவலர்கள், ஊழியர்கள், பத்திரப்பதிவு செய்வதற்காக வந்திருந்த 15-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தனியாக ஒரு அறைக்கு அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பின்னர் பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.

ரூ.25 ஆயிரம் பறிமுதல்

பின்னர் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அங்கு பத்திரப்பதிவு செய்ததற்காக பெறப்பட்ட கட்டணத்தையும், அங்கிருந்த ஆவணங்களையும்சரிபார்த்தனர். இரவு 9.15 மணி வரை இந்த சோதனை நீடித்தது. 4.30 மணி நேரம் நடந்த இந்த சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாமல் ரூ.25ஆயிரம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து அங்கிருந்த மாவட்ட பத்திரப்பதிவு அதிகாரி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடந்த தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்களும் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்