பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். சிற்றாறு பட்டணங்கால்வாயில் தண்ணீர் திறந்துவிடக்கோரி இந்த போராட்டம் நடந்தது.

Update: 2017-10-10 23:00 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் சிற்றாறு பட்டணங்கால்வாய் மற்றும் அதன் கிளை கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் பகுதிகளும், குடிநீர் பெறும் பகுதிகளும் தண்ணீர் திறக்கப்படாததால் பாதிப்படைந்துள்ளன என்றும், எனவே சிற்றாறு பட்டணங்கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், இல்லையென்றால் நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அலுவலகத்தில் 10–ந் தேதி (நேற்று) முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுப்பிரமணி அலுவலகத்தில், செயற்பொறியாளர் இருக்கைக்கு முன் உள்ள இருக்கைகளில் அமர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களுடன் இந்த போராட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் லாரன்ஸ், அலெக்ஸ், வின்ஸ் ஆன்றோ, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், மாவட்ட பாசன சங்க தலைவர் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, பத்மதாஸ், அலெக்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனால் அந்த அலுவலகத்தில் திடீர் பரபரப்பு நிலவியது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கால்வாயை தூர்வாரி கடைவரம்பு வரை தண்ணீர் திறந்து விடுவோம் என்று எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதி அளித்தால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறினர்.

இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிள்ளியூர், குளச்சல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சிற்றாறு பட்டணங்கால்வாய் மற்றும் அதன் கிளை கால்வாய்களில் கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் இம்மாதம் கடைசி வரையில் தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும், அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காலை 11.45 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மதியம் 12.45 மணிக்கு முடிவுக்கு வந்தது. 1 மணி நேரம் நடந்த இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்