பர்கூர் மலைக்கிராமத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் மாணவ-மாணவிகள் மனு

பர்கூர் மலைக்கிராமத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாணவ-மாணவிகள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2017-10-10 08:30 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தென்குளம் பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவ -மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

நாங்கள் பர்கூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சின்ன செங்களம், பெரிய செங்களம், ஆலசோப்பனட்டி ஆகிய கிராமங்களில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த மாணவ -மாணவிகள் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒசூர் உயர்நிலைப்பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்று படித்து வருகிறார்கள்.
அதிக தூரம் நடந்து செல்வதால் எங்கள் குழந்தைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் பாதியிலேயே நின்று விடுகிறார்கள். எனவே எங்கள் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் மாணவ -மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிளாவது வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.

இந்திய மக்கள் சட்ட கழகம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘தமிழக அரசு சார்பில் பூம் பூம் மாட்டுக்காரர்கள் 37 பேருக்கு பூந்துறை கிராமத்தில் தலா 2 சென்ட் நிலம் ஒதுக்கப்பட் டது. இந்த இடத்தில் கழிப்பறை வசதியுடன் கூடிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். மேலும் இவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாதிச்சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்ம்’ என்று கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு பகுதியில் வாழும் இலங்கை அகதிகள் 20-க்கும் மேற்பட்டோர் கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு பழையபாளையம், சங்குநகர், திண்டல், மேட்டுக்கடை ஆகிய பகுதிகளில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டி கொடுக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

கொ.ம.தே.க. சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. மொடக்குறிச்சி அருகே உள்ள புஞ்சை லக்காபுரம் பாலுசாமி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 282 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை மாவட்ட வருவாய் அதிகாரி பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து ஒருவருக்கு இஸ்திரி பெட்டியும், ஒருவருக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டது.

மேலும் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு கண் பார்வையற்றோருக்கான ஆயுட்கால நிவாரண நிதி உதவியின் கீழ் மாதாந்திர நிதி உதவியாக ரூ.6 ஆயிரத்துக்கான காசோலையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.5 ஆயிரத்து 350 மதிப்பிலான சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி என்.ராமச்சந்திரன், மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

மேலும் செய்திகள்