ஆப்பிரிக்காவில் கைதான சிவமொக்காவை சேர்ந்த 11 பேர் விடுவிப்பு
ஆப்பிரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி வேலைக்கு வந்ததாக கூறி கைதான 11 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சதாசிவப்புரா பகுதியில் ஹக்கி-பிக்கி என்னும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இந்த பகுதியில் மூலிகை பொருட்களை விற்பனை செய்தும், தோட்டங்களில் தொழிலாளிகளாக வேலை செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மக்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 11 பேர் ஒரு குழுவாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க நாட்டிற்கு வேலைக்காக சென்றனர்.
கைது
ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாமல் அங்கு வந்ததாக கூறி உகாண்டா போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் இதுகுறித்து சிவமொக்காவில் உள்ள தங்களது பழங்குடியின மக்கள் தலைவருக்கு தகவல் கொடுத்தார்.
இதைதொடர்ந்து அங்கு கைது செய்யப்பட்ட 11 பேரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரக் கோரி ஹக்கி-பிக்கி பழங்குடியின மக்களின் தலைவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரேவிடம் மனு அளித்தார். இதுகுறித்து அவர், போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டிக்கு தகவல் தெரியப்படுத்தினர்.
விடுதலை
இதைதொடர்ந்து ஆப்பிரிக்க நாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 11 பேரையும் மீட்கும்படி மந்திரி ராமலிங்க ரெட்டி, கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா ஆகியோருக்கு உத்தரவிட்டார். போலீஸ் உயர் அதிகாரிகளின் நடவடிக்கையை தொடர்ந்து ஆப்பிரிக்காவில் கைது செய்யப்பட்ட அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களை சொந்த ஊரான சிவமொக்காவிற்கு அழைத்து வர கர்நாடக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அவர்கள் சிவமொக்காவுக்கு வந்து சேருவார்கள் என தெரிகிறது.