குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி. வரி வீதத்தை மத்திய அரசு குறைத்தது -சிவசேனா
குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி. வரி வீதத்தை மத்திய அரசு குறைத்ததாக சிவசேனா தெரிவித்துள்ளது.
மும்பை,
சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி. வரி வீதத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில் சில மாற்றங்களை செய்து, சில பொருட்களின் வரி வீதத்தை குறைத்துள்ளது. இதனை மேற்கோள்காட்டி சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில், கூறி இருப்பதாவது:-
பணமதிப்பு நீக்க கோடரி நாட்டின் மீது விழுந்ததும், அதன் பொருளாதாரம் மீட்க முடியாததாகி விட்டது. அதன்பிறகு, உறங்கும் பொருளாதாரத்துக்கு எதிராக ஜி.எஸ்.டி. என்னும் ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. இதனால், பணவீக்கம் உயர்ந்தது. தற்போது, ஜி.எஸ்.டி. வரி வீதத்தை மத்திய அரசு குறைத்து, அதன் ஆணவப்போக்கை விலக்கி, தலைகுனிந்துவிட்டது. இது பொதுமக்களுக்கான வெற்றி.
குஜராத்தில் போராட்டம்
அதேநேரத்தில் குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி. வரி வீதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. குறிப்பாக ‘காக்ரா’ (ஒருவகை மிருதுவான உணவுவகை) மீது விதிக்கப்பட்ட 12 சதவீத வரியை 5 சதவீதமாக குறைத்திருக்கிறது.
சூரத், ராஜ்கோட் மற்றும் ஆமதாபாத்தில் ஏராளமான சிறுவியாபாரிகள் வீதியில் இறங்கி ஜி.எஸ்.டி.க்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனால், குஜராத்தில் தேசவிரோத சூழல் உருவா னது. ஆகையால், ஜி.எஸ்.டி. வரி வீதத்தை குறைக்கும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது.
பொருளாதாரம் நாசம்
மோடி தொடக்கத்தில் இருந்தே ஒரே சீரான வரிவிதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவர் குஜராத் முதல்-மந்திரி ஆக பதவி வகித்த காலகட்டத்தில், ஜி.எஸ்.டி. அமலுக்கு வரும்பட்சத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துவிடும் என்றும் பொருளாதார வளர்ச்சி திணறிவிடும் என்றும் கருதினார்.
ஆனால், பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும், ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டது. மோடி தன்னுடைய வார்த்தைகளை பின்வாங்கி கொண்டார். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. நடைமுறை நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்திவிட்டது.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.