போலீசாரை தாக்கிய பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

தூத்துக்குடியில் போலீசாரை தாக்கிய ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. காயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2017-10-09 23:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அத்திமரப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 46), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஜெயா. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1994-ம் ஆண்டு முதல் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் முத்துக்குமார் பெயர் இருந்து வருகிறது.

இவர் மீது முத்தையாபுரத்தில் 2 கொலை வழக்கு உள்பட 30 வழக்குகளும், தெர்மல்நகர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், தென்பாகம் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகளும், புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் ஆக மொத்தம் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். தற்போது சொந்த ஊரான அத்திமரப்பட்டியில் வசித்து வருகிறார்.

இவருடைய நெருங்கிய நண்பர் முத்தையாபுரம் பாரதி நகரை சேர்ந்த விஜயராஜ்(41). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கடந்த 6-ந் தேதி மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில், பாரதி நகரை சேர்ந்த ஆரோக்கியராஜ்(50), கருப்பசாமி ஆகியோர் சேர்ந்து விஜயராஜை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த விஜயராஜ் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரோக்கியராஜ், கருப்பசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விஜயராஜை, நண்பர் முத்துக்குமார் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு முத்துக்குமார், நண்பரை தாக்கியவர்களின் வீட்டுக்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருப்பசாமியின் தாயார் மேரி, முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து முத்துக்குமாரை கைது செய்வதற்காக தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் தலைமையில் போலீஸ்காரர்கள் முத்துராஜன், டென்சிங், சாமுவேல், ராம்பாபு ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை 9 மணி அளவில் முத்துக்குமார் அத்திமரப்பட்டியில் உள்ள வீட்டில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் மற்றும் போலீசார் அத்திமரப்பட்டிக்கு விரைந்து சென்றனர்.

வீட்டில் இருந்த முத்துக்குமாரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் போலீசாரை தாக்கி விட்டு காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் மற்றும் போலீஸ்காரர் முத்துராஜன் ஆகிய 2 பேருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாருக்கு மிரட்டல் விடுத்தபடி முத்துக்குமார் தப்பி ஓடியதாக தெரிகிறது.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ், தான் வைத்து இருந்த துப்பாக்கியால் முத்துக்குமாரை நோக்கி 3 முறை சுட்டார். முதல் 2 குண்டுகள் குறி தவறி தரையில் பட்டது. 3-வது குண்டு முத்துக்குமாரின் இடது கால் தொடைப்பகுதியில் பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் முத்துக்குமார் சுருண்டு விழுந்தார். உடனடியாக போலீசார் முத்துக்குமாரை மடக்கி பிடித்தனர்.

காயம் அடைந்த முத்துக்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ், போலீஸ்காரர் முத்துராஜன் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக்ஜேக்கப் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்