குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பியது பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

குடியாத்தம் மோர்தானா அணை 6-வது முறையாக நிரம்பியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2017-10-09 23:00 GMT
குடியாத்தம்,

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக மோர்தானா அணை உள்ளது. குடியாத்தத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புங்கனூர், பலமனேர், நாயக்கனேரி உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் மழை பெய்தால் அதிலிருந்து கவுண்டன்ய மகாநதியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது. 392 மீட்டர் நீளம் உள்ள இந்த அணையின் முழு உயரம் 23.89 மீட்டர் ஆகும். இதன் நீர்த்தேக்க உயரம் 11.5 மீட்டர் ஆகும். இந்த அணையின் கொள்ளளவு 262 மில்லியன் கனஅடி ஆகும்.

மோர்தானா அணைக்கு முக்கிய நீர்ஆதாரமான ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள புங்கனூர், பலமனேர், நாயக்கனேரி காட்டுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மோர்தானா அணைக்கு தண்ணீர் வர தொடங்கியது. மேலும் ஆந்திர மாநிலத்தில் காலவப்பல்லி தடுப்பணை நிரம்பி வழிவதாலும், நலகாம்பல்லி ஏரி நிரம்பி வழிவதாலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனைதொடர்ந்து நேற்று காலையில் 8.30 மணி அளவில் மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் வழிந்து செல்கிறது. இந்த அணை கட்டியபிறகு 2000, 2001, 2005, 2008, 2015 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 6-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்துள்ளது. நீர்வள ஆதாரதுறை செயற் பொறியாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், உதவி செயற் பொறியாளர் பாபுசுரேஷ்வர்மன், உதவி பொறியாளர் ரவி உள்ளிட்டோர் அணையின் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

இந்த அணையில் இருந்து செல்லும் தண்ணீர் ஜிட்டப்பல்லி செக் டேமில் இருந்து வலது, இடதுபுற கால்வாய்கள் வழியாகவும், கவுண்டன்ய மகாநதியின் வழியாகவும் செல்கிறது.

வலதுபுற கால்வாய் மூலம் செல்லும் தண்ணீர் அக்ராவரம், பெரும்பாடி, எர்த்தாங்கல், செருவங்கி நெல்லூர்பேட்டை ஏரி, தட்டாண்குட்டை, இறையன்காடு, விரிஞ்சிபுரம், ஒக்கணாபுரம், செதுவாலை, மேல்மொணவூர் கடப்பேரி, சதுப்பேரி, தொரப்பாடி ஏரிகளுக்கும், இடதுபுற கால்வாய் மூலம் செல்லும் தண்ணீர் அம்மணாங்குப்பம், வேப்பூர், நெட்டேரி, பசுமாத்தூர் பெரிய ஏரி, சித்தேரி, கீழ்ஆலத்தூர், காவனூர் ஏரிகளுக்கும் செல்கிறது. இதன் மூலம் சுமார் 8400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

மேலும் தண்ணீர் செல்லும் வழிநெடுகிலும் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட நீர்ஆதாரங்களில் நீர்மட்டம் உயரும். இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணை தற்போது நிரம்பி வழிவதால் குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அணையை சென்று பார்வையிட்டு வருகின்றனர். இதனையொட்டி அணை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்