கலெக்டர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-10-09 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமராவதி. இவர்களுக்கு அனுஷியா, அனிதா என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கோவிந்தன் குடும்பத்துடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தார்.

கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே திடீரென மண்எண்ணெயை ஊற்றி அவர்கள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கோவிந்தன் கூறியதாவது:- எங்களது பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர் எங்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் குடிசை போட்டு கொண்டனர். இதையடுத்து நாங்கள் போலீசில் புகார் செய்தோம். அப்போது இனி எந்த பிரச்சினையும் செய்ய மாட்டோம் என எழுதி கொடுத்தனர். ஆனால் 2011-ம் ஆண்டு குடிசையை அகற்றிவிட்டு, செங்கல் வைத்து சுவர் கட்டி அட்டை போட்டு விட்டனர்.

இதை தட்டிக்கேட்டதால் என்னை தாக்கினர். நான் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது, எனது வீட்டில் உள்ள சமையல் அறையின் கதவு போன்றவற்றை அடித்து உடைத்து விட்டனர். தற்போது அந்த இடத்தில் கான்கிரீட் வீடு கட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தட்டிக் கேட்டால் எங்களை தாக்குகின்றனர். இதை கண்டித்து தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்