சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பேரணி கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோட்டாட்சியரிடம் வழங்கினர்

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பேரணியாக சென்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோட்டாட்சியரிடம் வழங்கினர்.

Update: 2017-10-09 23:00 GMT

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று காலையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமாகோவில் அருகே ஒன்று திரண்டனர். அங்கிருந்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமையில் பேரணியாக பஸ் நிலையம் அருகில் உள்ள காந்திசிலை பகுதிக்கு வந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். பின்னர் அவர்கள், கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக சென்று, கோட்டாட்சியர் ராஜேந்திரனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களுக்கு எந்தவித பணப்பயன்களோ, அகவிலைப்படி, நிலுவைத்தொகை, பதவி உயர்வுகளோ, ஓய்வூதியர்களுக்கு பணப்பயன்களோ வழங்கப்படவில்லை.

இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களாகிய நாங்கள் எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழக கவர்னர், முதல்–அமைச்சரிடம் மனு கொடுத்தும் வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்துக்கான சம்பளத்தை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்காததால் 10 ஆயிரம் ஆசிரியர், ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

1996–ம் ஆண்டு வரை மட்டும் கணக்கில் கொண்டு வழங்கப்படுகின்ற தமிழக அரசின் தொகுப்பு நிதியை 2013–ம் ஆண்டு வரை உள்ள ஆசிரியர், ஊழியர்கள் எண்ணிக்கைக்கேற்ப உயர்த்தி வழங்க வவண்டும், பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பு ரூ.1700 கோடியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு சம்பளத்தை அந்தந்த மாத கடைசி தேதியில் வழங்க வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆசிரியர், ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், மற்ற பல்கலைக்கழகத்தை போல அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் மீளபணியமர்த்தலை வழங்க வேண்டும்,

பல்கலைக்கழகத்தில் இருந்து பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர், ஊழியர்களுக்கு வருடாந்திர ஊக்கத்தொகை, ஈட்டியவிடுப்பு, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வருகிற 22–ந் தேதிக்குள் நிறைவேற்றித்தர வேண்டும். நிறைவேறாத பட்சத்தில் ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் கூட்டமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்