கடலூரில் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா
மேலபருத்திக்குடி, காஞ்சிவாய் வழியாக மணல் லாரிகள் செல்ல தடைவிதிக்க கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த கிராம மக்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சி.அரசூர் கிராமத்தில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. குவாரியில் பொக்லைன் எந்திரங்களால் மணல் அள்ளி லாரிகள் ஏற்றப்படுகின்றனர். பின்னர் அந்த லாரிகள் மேலபருத்திக்குடி, காஞ்சிவாய் வழியாக பல்வேறு இடங்களுக்கு செல்கின்றன. இதனால் மேலபருத்திக்குடி, காஞ்சிவாய், வெள்ளூர், குருவாடி, மடப்புரம், மா.அரசூர், சி.அரசூர் ஆகிய கிராமங்களில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுவதோடு பள்ளிக்குச்செல்லும் மாணவ–மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் மேலபருத்திக்குடி, காஞ்சிவாய் வழியாக மணல் லாரிகள் செல்ல தடை விதிக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க காஞ்சிவாய், மேலபருத்திக்குடி கிராம மக்கள் நேற்று மதியம் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு, கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர். பின்னர் கிராம மக்கள் குறைகேட்புக்கூட்ட அரங்குக்குள் சென்று தரையில் அமர்ந்து கொண்டனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் எச்சரித்ததால், எழுந்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு திரும்பிச்சென்றனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
சி.அரசூர் அரசு மணல் குவாரியில் இருந்து நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள், டிராக்டர்கள் மணல் அள்ளி செல்கிறது. அரசு குவாரியில் இருந்து புளியங்குடி வழியாக செல்ல நல்ல தார்சாலை வசதியிருந்தும் மேலபருத்திக்குடி, காஞ்சிவாய் வழியாக மணல் லாரிகள் செல்கிறது. அப்பகுதியில் சென்ற மணல் லாரிகள் மோதி 8 மாடுகள் உயிரிழந்துள்ளன, இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். எனவே மேலபருத்திக்குடி, காஞ்சிவாய் வழியாக மணல் லாரிகள் செல்ல தடை விதித்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வேறு வழியாக மணல் லாரிகள், டிராக்டர்கள் செல்ல உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.