கீழடியில் 3–ம் கட்ட அகழாய்வு பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன

திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெற்ற 3–ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் நேற்று மூடப்பட்டன.

Update: 2017-10-09 23:15 GMT

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, பள்ளிச்சந்தைபுதூர் பகுதியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இந்த அகழாய்வின் மூலம் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிட்டியுள்ளன. அதன்படி அகழாய்வு முடிவில் நன்று கட்டப்பட்ட தொழிற்கூடம், குடியிருப்புகள், வணிக நகரங்களாக கீழடியில் செயல்பட்டதற்கான அடையாளங்கள் கிடைக்கப்பெற்றன. கடந்த 2015–ம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணியும், 2–ம் கட்டமாக கடந்த ஆண்டும் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் மண்பானைகள், கருவிகள் உள்ளிட்ட 6 ஆயிரம் பொருட்கள் கிடைத்தன. இவைகளை ஆய்வு செய்ய உட்படுத்தப்பட்ட போது, அவை அனைத்தும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் 3–ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இப்பணி கடந்த மாதம் 30–ந்தேதி வரை நடைபெற்றது. இப்பணிக்காக 400 ச.மீ. பரப்பளவில் குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி நடைபெற்றது. இதில் 1,800 பொருட்கள் கிடைத்தன. அவற்றில் பல கண்ணாடியால் செய்யப்பட்ட மணிகள், தங்க பொருட்கள், மண்பானைகளாக கிடைத்தன. 3–ம் கட்ட பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அகழாய்வுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் நேற்று மூடப்பட்டன. குழிகள் மூடும் பணி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் ஸ்ரீராமன் கூறும்போது, கீழடியில் 4–ம் கட்ட அகழாய்வு பணிகள் மத்திய அரசு தெரிவித்தால் மட்டுமே நடைபெறும் என்றார்.

மேலும் செய்திகள்