அடுத்த மாதம் 13–ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
பாளையங்கோட்டையில் அடுத்த மாதம் (நவம்பர்) 13–ந் தேதி மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சாரல் அரங்கத்தில் மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஒவ்வொரு துறை சார்பிலும் வழங்கட உள்ள நலத்திட்ட உதவிகள் குறித்தும், புதிதாக திறக்கப்பட வேண்டிய கட்டிடங்கள், புதிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. விழா தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் ஒவ்வொரு துறையிலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
முடிவில் மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் பழனி நன்றி கூறினார்.
கூட்டத்தில், எம்.பி.க்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், வசந்திமுருகேசன், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.அருண் சக்தி குமார், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணா சிங், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) இளம் பகவத், மாநில கூட்டுறவு விற்பனை இணைய துணைத் தலைவர் கண்ணன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம். நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ராஜன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ராஜலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:–
மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நெல்லை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா அடுத்த மாதம் (நவம்பர்) 13–ந் தேதி பாளையங்கோட்டையில் உள்ள பெல் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
விழாவில், தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் அவர் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். வருகிற 16–ந் தேதி (திங்கட்கிழமை) பாளையங்கோட்டை பெல் மெட்ரிக்குலேன் பள்ளி மைதானத்தில் கால்கோள் விழா நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து அமைச்சர் ராஜலட்சுமி விழா நடைபெற உள்ள பெல் மெட்ரிக்குலேசன் மைதானத்தை பார்வையிட்டார். அவருடன் எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.