விவசாயியை கொன்று நாடகமாடிய மகன் கைது புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை

சுரண்டை அருகே, விவசாயியை கொன்று மதுபோதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர். புதைக்கப்பட்ட விவசாயி உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2017-10-09 23:15 GMT

சுரண்டை,

சுரண்டை அருகே உள்ள கோவிலான்டனூர் மெயின் ரோட்டை சேர்ந்த ராயப்பன் மகன் தாமஸ்(வயது55). விவசாயி. இவருடைய மனைவி நேசம். மகன் ஜான் பிரிட்டோ(32). விவசாயி. இவருக்கு திருமணமாகி பெற்றோருடன் மனைவி குழந்தையுடன் வசித்து வருகிறார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாமஸ் மனைவி நேசத்துடன் தென்காசிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மாலையில் மீண்டும் இருவரும் தென்காசியிலிருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வழியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து நேசம் படுகாயம் அடைந்தார்.

அவர், நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் குடும்பத்தினக் கஷ்டப்பட்டு உள்ளனர். வேறு வழியின்றி தனது மோட்டார் சைக்கிளை விற்று, அதில் கிடைத்த பணத்தை தாயின் மருத்துவ செலவுக்கு பயன்படுத்துமாறு தாமசிடம் ஜான் பிரிட்டோ கொடுத்துள்ளார். ஆனால், அந்த பணத்தை மருத்துவ செலவுக்கு பயன்படுத்தாமல், மது வாங்கி குடித்து தாமஸ் செலவு செய்து விட்டாராம்.

இது தொடர்பாக, கடந்த 5–ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த தாமசிடம் ஜான் பிரிட்டோ கேட்டுள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், அரிவாளால் தாமஸ் தலையில் ஜான் பிரிட்டோ வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு ஜான் பிரிட்டோ வெளியே சென்று விட்டாராம். மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்தபோது, தாமஸ் இறந்து கிடந்தாராம். அவர் மது போதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக, அக்கம் பக்கத்தினரிடம் கூறிய ஜான் பிரிட்டோ இறுதி சடங்குகள் செய்து, அவரது உடலை கல்லறை தோட்டத்தில் புதைத்து விட்டாராம்.

தாமஸ் சாவில் சந்தேகம் இருப்பதாக, கிராம நிர்வாக அதிகாரி குருசாமி கொடுத்த புகாரின் பேரில், புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயக்குமார், சேர்ந்தமரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கோவிந்தசாமி, சப்–இன்ஸ்பெக்டர்கள் தர்மராஜ், சுப்பையா, கணேசன் ஆகியோர் ஜான் பிரிட்டோவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதை தொடர்ந்து நேற்று ஜான் பிரிட்டோவை சேர்ந்தமரம் போலீசார் கைது செய்தனர். நேற்று மாலையில் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டு இருந்த தாமசின் உடல் தாசில்தார் மாரியப்பன், வருவாய் ஆய்வாளர் சூசை மற்றும் போலீசார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, தாமஸ் தலையில் வெட்டு காயம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவருடைய உடல் மீண்டும் புதைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்