சிவகங்கை ஒன்றியத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் லதா தொடங்கி வைத்தார்.

Update: 2017-10-09 11:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் தூய்மை பணி தொடக்க நிகழ்ச்சி இடையமேலூர் ஊராட்சியில் பொது சுகாதாரத்துறை, பஞ்சாயத்து அலுவலகம் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லதா தலைமை தாங்கி டெங்கு ஒழிப்பு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தூய்மை மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி வரை கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் நடைபெறுகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தற்போது இடையமேலூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்துவிதமான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

டெங்கு ஒழிப்பு பணியில் டாக்டர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், டெங்கு கள பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோக தனியார் தொண்டு நிறுவனங்களும் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு சிவகங்கை ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில் துப்புரவு பணிகளான ஏடிஸ் கொசு புழு ஒழிப்பு, கொசு மருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் இளங்கோ, துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) யசோதாமணி, உதவி இயக்குனர்(பஞ்சாயத்து)ரங்கசாமி, சிவகங்கை ஒன்றிய கிராம ஊராட்சிகள் ஆணையாளர் ஜஹாங்கீர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்