மோட்டார் வாகன தொழிலாளர்கள் போராட்டம்

மோட்டார் வாகன தொழிலாளர்கள் போராட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் நாளை 10–ந்தேதி 5 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

Update: 2017-10-09 00:05 GMT

நெல்லை,

தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, மோட்டார் வாகன தொழில் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மோட்டார் தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகன பட்டறைகள் மற்றும் ஒர்க்ஷாப்புகள் கடுமையாக பாதிக்கும்.

மேலும் ஒப்பந்த வாகனம் இயக்கவோ, ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள், தனியார் பஸ்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

எனவே இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் மோட்டார் தொழில் தொடர்பான அனைத்து சங்கத்தினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். அந்தந்த மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் எங்களது அமைப்பின் மாநில செயலாளர் வைகை குமார் கலந்து கொள்கிறார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் பேர் வேலைகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த போராட்டத்துக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளித்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்