மாநில அரசு மீது தேசியவாத காங்கிரஸ் தாக்கு
பூச்சிக்கொல்லி மருந்தில் உள்ள நச்சுத்தன்மை தாக்கியதில், ஏராளமான விவசாயிகள் பலியாகி இருக்கின்றனர்.
மும்பை,
பூச்சிக்கொல்லி மருந்தில் உள்ள நச்சுத்தன்மை தாக்கியதில், ஏராளமான விவசாயிகள் பலியாகி இருக்கின்றனர். இது திட்டமிட்ட படுகொலை என்று மராட்டிய அரசின் மீது தேசியவாத காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
விவசாய விளைபொருட்களின் மீது பூச்சிகள் சேதம் ஏற்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, அதன் மீது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் உள்ள நச்சுத்தன்மை தாக்கியதில் யவத்மால், புல்தானா மற்றும் அகோலா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் உயிர் இழந்தனர்.இந்த நிலையில், யவத்மாலில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மராட்டிய மேல்–சபை எதிர்க்கட்சி தலைவருமான தனஞ்செய் முண்டே நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
இது திட்டமிட்ட படுகொலை. இதற்கு பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனம் மட்டுமின்றி, விவசாய துறை அதிகாரிகளும் பொறுப்பு. இதே விதர்பா மண்டலத்தை சேர்ந்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை.பூச்சிக்கொல்லி மருந்து தாக்கி பலியான விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்க வேண்டும். மேற்கொண்டு விவசாயிகள் பலியாகாமல் இருப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை.
இவ்வாறு தனஞ்செய் முண்டே தெரிவித்துள்ளார்.