தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கோவை கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கோவை கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2017-10-08 22:45 GMT
கோவை,

தீபாவளி பண்டிகை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, பெரியகடைவீதி, கிராஸ்கட் ரோடு, ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பொருட்களை வாங்க வந்திருந்தனர். இதனால் கூட்டநெரிசல் அதிகமாக இருந்தது. இதை பயன்படுத்தி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பு மற்றும் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அத்தகைய அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோவை மாநகர போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்காக கோவை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை உள்பட முக்கிய சாலைகளில் உள்ள கடைகளுக்கு அதிக மக்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நடந்து செல்வதற்காக சாலையின் ஒரு புறம் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த தடுப்புக்குள் தான் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டும்.

கடை வீதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகளை பார்த்து போலீசார் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்துகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலை ஆகிய பகுதிகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றோடு இணைக்கப்பட்டுள்ள கணினி மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுதவிர கூட்டத்தினரை மேலிருந்து கண்காணிப்பதற்காக ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜ வீதிகளில் கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்தவாறு போலீசார் பைனாகுலர் மூலம் கூட்டத்தினரை கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு ஒலிபெருக்கியில் போலீசார் அறிவிப்புகளை விடுத்த வண்ணம் உள்ளனர்.

சாலையை கடக்கும் பொதுமக்களின் வசதிக்காக போலீசார் கயிறு கட்டி கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள். தீபாவளி திருடர்களை கண்காணிப்பதற்காக குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் ரோந்து செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் காலை, மாலை நேரங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்