கல்வி, வேலை வாய்ப்பில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்

கல்வி, வேலை வாய்ப்பில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2017-10-08 22:45 GMT
மதுரை,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உரிமை முழக்க மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் எம்.முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் தனியரசு எம்.எல்.ஏ. பேசும்போது, இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற அமைப்புகளுக்கு விருப்பம் இல்லை. சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். இந்த துறைகள் அனைத்திலும் அது பலவீனமாக உள்ளது. இதனால் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால், அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை வழங்க வேண்டும். மக்களின் உணவுப் பழக்கம், பண்பாடு, கலாசாரம் உள்ளிட்டவற்றில் ஆட்சியாளர்கள் தலையிடக்கூடாது என்றார்.

தீவிரவாத அமைப்புகள்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் முகமது அலி ஜின்னா பேசுகையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. போன்ற அமைப்புகளை தீவிரவாத அமைப்புகளாக சித்தரிக்கும் போக்கை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். மதத்தின் பெயரில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் எந்த அமைப்பையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஏற்றுக்கொள்ளாது. மக்கள் நலன் மட்டுமே எங்களுக்கு முக்கியம். ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கும்போது அதற்கு எதிராக குரல் எழுப்பும் முஸ்லிம் மக்களை, தேசிய புலனாய்வு அமைப்பை(என்.ஐ.ஏ) வைத்து மிரட்டும் தவறான போக்கை பா.ஜ.க. கைவிட வேண்டும் என்றார்.

தீர்மானம்

மாநாட்டில், நீட் தேர்வை ரத்து செய்து கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்த வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பை கலைக்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்