காட்பாடி அருகே தண்டவாளத்தில் கிடந்த ஆண், பெண் உடல்கள்
காட்பாடி அருகே தண்டவாளத்தில் ஆண், பெண் பிணம் கிடந்தது. அவர்கள் காதல் ஜோடியா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட்,
காட்பாடி அருகே தண்டவாளத்தில் ஆண், பெண் பிணம் கிடந்தது. அவர்கள் காதல் ஜோடியா? என்பது குறித்தும் ஓடும் ரெயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
வேலூர் மாவட்டம் காட்பாடி – முகுந்தராயபுரம் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் மற்றும் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பிணம் கிடப்பதாக காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரும் காதல் ஜோடியாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது. இறந்து கிடந்த வாலிபர் கருப்பு நிற பேண்ட்டும், வெள்ளை சட்டையும், இளம் பெண் ஜீன்ஸ் பேண்ட்டும், நீல நிறத்தில் பூப்போட்ட சட்டையும் அணிந்திருந்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள், இருவரும் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.