சேலம், ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

சேலம், ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு நடத்தினார். ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக ஒரு ஆம்புலன்ஸ் வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.

Update: 2017-10-08 02:30 GMT

சேலம்,

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் டெங்கு அறிகுறி இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த ஒரு மாதத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 50–க்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென்று வந்து ஆய்வு நடத்தினார். காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டவர்களை வார்டு வாரியாக சென்று பார்வையிட்டார். அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

அப்போது நோயாளிகளின் உறவினர்கள், ஆஸ்பத்திரியில் போதிய படுக்கை வசதி இல்லை என்றும், ஒரே படுக்கையில் 2 அல்லது 3 குழந்தைகளை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், போதிய கழிவறை வசதி இல்லை என்றும் தெரிவித்தனர். அதையடுத்து நோயாளிகளுக்கு தேவையான வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்த விவரங்களை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் யார் கேட்டாலும் மறைக்காமல் உள்ளதை தெரிவிக்க வேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளவர்கள் பற்றியும் வெளிப்படையாக தெரிவிக்கவும் டீன் கனகராஜ், கண்காணிப்பு மருத்துவர் டாக்டர் சம்பத் ஆகியோரிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கலெக்டர் ரோகிணி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, சேலம் மாநகர் நல அலுவலர் டாக்டர் பிரபாகரன் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். தொடர்ந்து காய்ச்சலால் பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் வார்டிற்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘‘ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் நியமனம் செய்யவும், தேவைப்படும் நிதி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய 108 ஆம்புலன்ஸ் நாளை (அதாவது இன்று) வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு உடனடியாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளது.‘‘ என்றார்.

மேலும் செய்திகள்