டெங்கு விழிப்புணர்வு குறித்து கவர்னர் கிரண்பெடி நடைபயணம்

புதுவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2017-10-07 22:45 GMT

புதுச்சேரி,

400க்கும் அதிகமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று கவர்னர் கிரண்பெடி குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும் முதல்–அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோர் தொகுதிகளில் சென்று டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வும் மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் வீட்டின் அருகே குப்பைகளை கொட்டக்கூடாது. தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் புதுச்சேரியில் பொதுமக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கவர்னர் மாளிகையில் இருந்து 5 கி.மீ நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து இருந்தார். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று காலை கவர்னர் மாளிகையில் இருந்து கவர்னர் கிரண்பெடி நடைபயணத்தை மேற்கொண்டார். இந்த விழிப்புணர்வு நடைபயணம் கடற்கரை சாலை, குருசுகுப்பம், சோலைநகர், முத்தியால்பேட்டை, செஞ்சி சாலை வழியாக சென்று மீண்டும் கவர்னர் மாளிகையை அடைந்தது. இந்த நடைபயணத்தில் அரசு அதிகாரிகள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் டெங்கு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய படி சென்றனர். நடைபயணத்தின்போது டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்