தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும்: வேல்முருகன் பேட்டி
பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொகுதி பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு கூட்டம் நடைபெற்றது.
பண்ருட்டி,
பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொகுதி பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமான குழந்தைகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி இந்த நோயால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த நோயை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கு அரசு செயலாளர்களை அனுப்பிவைத்து அவர்கள் தலைமையில் மாவட்ட கலெக்டர், சுகாதார துறை இயக்குனர் மற்றும் 24 மணிநேரமும் பணியாற்றக்கூடிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் பணியாற்ற டாக்டர்கள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு புதிய கவர்னர் பொறுப்பேற்றுள்ளார். அவரை தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்கிறது. தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை நிலுவையில் உள்ளது. புதிய கவர்னர் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.