ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக குறைந்தது பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக குறைந்தும் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 10-வது நாளாக நீடிக்கிறது.

Update: 2017-10-07 23:00 GMT
பென்னாகரம்,

கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழகத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் தண்ணீர் ஐந்தருவிகள், சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 10-வது நாளாக தொடர்ந்து அமலில் இருந்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை முதல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு கீழ் தண்ணீர் சென்றது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாக இருந்தது.

நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்தனர். பின்னர் அவர்கள் பார்வைகோபுரம், தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரின் அழகை கண்டு ரசித்தனர். போலீசார், தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்