தனியார் ஆஸ்பத்திரிகளில் நடக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அரசு கண்காணிக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தனியார் ஆஸ்பத்திரிகளில் நடக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அரசு கண்காணிக்க வேண்டும் என்று கோவையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2017-10-07 23:30 GMT

கோவை,

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசின் அறிக்கையிலேயே டெங்கு அதிகம் பாதித்த முதல் மூன்று மாநிலங்களில் தமிழகம் இடம் பெற்றுள்ளது. எனவே தமிழக சுகாதாரத்துறை 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும், அதையும் மீறி டெங்கு பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதை பார்க்கும்போது அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லையோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது.

டெங்கு காய்ச்சலை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் ஏன் சேர்க்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. இதை நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். எனவே தமிழக அரசு மத்திய அரசின் உதவியை பெற்றாவது போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணி யில் ஈடுபட வேண்டும். தமிழக அரசு மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது போலி டாக்டர்கள் அதிகரித்துள்ளனர். டெங்கு காய்ச்சலை பயன்படுத்தி போலி டாக்டர்கள் அதிகம் சம்பாதித்து வருகிறார்கள். கொசு அதிகரிப்பது போல போலி டாக்டர்களும் அதிரித்துள்ளது ஆபத்தானது. அவர்களிடம் சிகிச்சை பெறுவது அதைவிட அபாயகரமானது. எனவே தமிழக அரசு உடனடியாக போலி டாக்டர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை அளிக்கிறார்களா? என்று அரசு கண்காணிக்க வேண்டும். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தனியார் ஆஸ்பத்திரிகளில் தான் அதிகம் நடக்கிறது.

அரசு ஆஸ்பத்திரிகளில் அந்த அறுவை சிகிச்சை முடக்கப்பட்டது ஏன்?. உடல் உறுப்பு கொடையாளர்கள் அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளாக உள்ளனர். ஆனால் உடல் உறுப்பு பெறுபவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பணக்காரர்களாக இருக்கிறார்கள். எனவே தனியார் ஆஸ்பத்திரிகளில் நடக்கும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கோவையை அடுத்த பிரஸ் காலனியில் உள்ள மத்திய அரசு அச்சகத்தில் யாருக்கும் வேலை இழப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சசிகலா பரோலில் வந்திருப்பதால் அவர் அரசியல் ரீதியிலான சந்திப்பில் ஈடுபட கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இதை காவல்துறை கண்காணிக்க வேண்டும். அரசு அளிக்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்திவிடக் கூடாது.

கெயில் குழாய்களை விவசாய நிலங்களில் பதிக்கும் பிரச்சினை குறித்து விவசாயிகளிடம் உள்ள அச்சத்தை போக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதையும் மீறி மக்கள் பயந்தால் அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படும்.

தமிழக கவர்னர் பதவி ஏற்பு விழாவின்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்திருக்க வேண்டும். சில அதிகாரிகள் வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களா? என்று தெரியவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் திருத்திக் கொள்ள வேண்டும். வாக்கி டாக்கி உள்பட எந்த ஊழலாக இருந்தாலும் அதுபற்றி விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவையில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்