தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் வழங்கக்கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு
தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் வழங்கக்கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
மதுரை,
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் இருளாண்டி, பொதுச்செயலாளர் உலகநாதன், பொருளாளர் அருள்பிரகாஷ் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் சேவை திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். ஓட்டுனர்களாகவும், அவசர மருத்துவ உதவியாளராகவும் நாங்கள் உள்ளோம். தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் உள்பட 5 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகத்திற்கு மனு மூலம் தெரியப்படுத்தியும் பலன் இல்லை. எனவே இந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். தீபாவளியை முன்னிட்டு ஊக்கத்தொகை 5 ஆயிரத்து 300 ரூபாயை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி எங்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
அதன்படி வருகிற 17–ந் தேதி இரவு 8 மணிக்கு வேலைநிறுத்தம் தொடங்கி 18–ந் தேதி இரவு 8 மணி வரை மாநில அளவில் வேலை நிறுத்தம் நடைபெறும். அதன் பின்னரும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் 18–ந்தேதி இரவு 8 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.