வித்வான் சுகன்யா ராம்கோபால் பேச்சு இசை கலைஞர்களை கவர்ந்திழுக்கும் மானாமதுரை கடம்

இசை கலைஞர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதால் மானாமதுரை கடம் அவர்களை கவர்ந்திழுக்கிறது என்று பிரபல கடம் வித்வான் சுகன்யா ராம்கோபால் கூறினார்.

Update: 2017-10-07 22:00 GMT

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கடம் தயாரிப்பிற்கு மிகவும் புகழ் பெற்றது. நாடு முழுவதிலும் இருந்தும் கடம் வித்வான்கள் மானாமதுரை வந்துதான் கடம் வாங்கி செல்வது வழக்கம். பிரபல இசை கலைஞர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், விநாயக்ராம் உள்ளிட்ட பலரும் மானாமதுரை வந்து கடம் வாங்கி செல்கின்றனர். மானாமதுரை நகரை சுற்றியுள்ள செய்களத்தூர், மானம்பாக்கி, கரிசல்குளம் உள்ளிட்ட கிராம கண்மாய்களில் ஐந்து வித மண் எடுத்து வந்து குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கடம் தயாரிக்கின்றனர். மானாமதுரை நகரில் ரமேஷ் என்ற ஒரே குடும்பத்தினர் மட்டுமே கடம் தயாரிக்கின்றனர். மண்பாண்ட தயாரிப்பில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வந்தாலும், ரமேஷ் என்பவரின் குடும்பம் மட்டுமே கடம் தயாரிக்கிறது.

மானாமதுரையில் கடம் வாங்குவதற்காக பிரபல கடம் வித்வான் சுகன்யா ராம்கோபால், தனது மாணவர்களுடன் வந்திருந்தார். அவர் கூறும்போது, பிரபல கடம் வித்வான் விக்கு விநாயக்ராமின் 75–வது பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூருவில் வருகிற டிசம்பர் 10–ந்தேதி ஒரே மேடையில் 75 கடம் வித்வான்கள் இணைந்து கச்சேரி நடத்த உள்ளோம். இந்தியாவிலேயே முதன்முதலாக 75 கடம் வித்வான்கள் தற்போதுதான் ஒரே இடத்தில் கடம் வாசிக்க உள்ளனர். 13 பிட்கள்(ராகம்) பிரிக்கப்பட்டு கடம் இசைக்கப்பட உள்ளது. விழாவில் கடம் விநாயக்ராமும் பங்கேற்கிறார் என்றார். இந்தியாவிலேயே மானாமதுரை கடம்தான் சிறப்பு வாய்ந்தது. வேறு எங்கு கடம் வாங்கினாலும் வாசித்த திருப்தி இருக்காது. மானாமதுரை கடம்தான் முழு திருப்தியை தருகிறது. அதுவே இசை கலைஞர்களை கவர்ந்திழுக்க காரணம் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்