சிறு, குறு தொழில் நிறுவனங்களில் மின்னாற்றல் சேமிப்பு உபகரணங்களுக்கு 25 சதவீதம் மானியம்

சிறு, குறு தொழில் நிறுவனங்களில் மின்னாற்றல் சேமிப்பு உபகரணங்களுக்கு 25 சதவீதம் மானியம் வழங்குவதாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-10-07 23:15 GMT

ஆம்பூர்,

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின்னாற்றல் திறன் மேம்பாட்டுக்காக சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்காக தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு முகாம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் நடந்தது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி.மணிவண்ணன் முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘சிறப்பு திட்டத்தின்கீழ் மின்னாற்றல் தணிக்கை மற்றும் மின்னாற்றலை சேமிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின்னாற்றல் தணிக்கைக்கு ஆகும் செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை அரசு மானியமாக வழங்குகிறது.

இந்த திட்டத்தின்கீழ் தொழில் நிறுவனங்களின் மின்னாற்றலை சேமிப்பதற்கான தொழில் நுட்பங்களை பெறுவதற்கும், மின்னாற்றலை சேமிப்பதற்கான உபகரணங்களுக்காக செய்யப்படும் முதலீட்டில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் உபகரண செலவீனங்களுக்காக அதிகபட்சமாக ரூ.2½ லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும்’ என்றார்.

முகாமில் எரிசக்தி சிக்கன ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் நேசமணி, துணை இயக்குநர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டு மின்னாற்றல் தணிக்கை மற்றும் மின்னாற்றல் சேமிப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.

இதில் மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் எம்.வி.சுவாமிநாதன், தோல் தொழில் அதிபர் சங்க பிரதிநிதி பிர்தோஸ் கே.அஹமத், இந்தியன் வங்கி கிளை மேலாளர் ராகுல் மகேந்திரஷா, மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் அசோகன், அலுவலர் வசந்த், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்