கைதிகள் தப்பி ஓடிய விவகாரம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை,
கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. பிறப்பித்துள்ளார்.
பிரபல கொள்ளையர்கள்நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(வயது 22), மும்பை தாராவியை சேர்ந்த செல்வம் மகன் டேவிட் தேவேந்திரன்(23). இவர்கள் இருவரும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு வீடுகளின் கதவை உடைத்து நகை–பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.
இவர்களை நாகர்கோவில் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி நாகமணி என்பவருடைய வீடு, மற்றொரு தொழில் அதிபர் வீடுகளில் புகுந்து 50 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இந்த தகவலை நாகர்கோவில் போலீசார், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இவர்கள் இருவரையும் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
தப்பியோட்டம்இந்த நிலையில் மணிகண்டன், டேவிட் தேவேந்திரன் ஆகிய இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து நாகர்கோவில் கோர்ட்டில் அனுமதி பெற்றனர். பின்னர் இருவரையும் காவலில் எடுத்து பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி அவர்கள் தரப்பில் இருந்து நகை–பணத்தை மீட்டனர்.
இதை தொடர்ந்து மீண்டும் அவர்களை ஜெயிலில் அடைக்க கடந்த 4–ந் தேதி பாளையங்கோட்டையில் இருந்து வேனில் நாகர்கோவிலுக்கு அழைத்து சென்றனர். நாகர்கோவில் ஜெயில் வாசலில் வைத்து போலீசாரை கீழே தள்ளி விட்டு, விட்டு மணிகண்டன், டேவிட் தேவேந்திரன் ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் போலீசாரும், பாளையங்கோட்டை போலீசாரும் தப்பி ஓடிய மணிகண்டன், டேவிட் தேவேந்திரன் ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.
இதற்கிடையே நாகர்கோவில் குழித்துறை பகுதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மணிகண்டனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தலைமறைவான டேவிட் தேவேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.
3 பேர் பணியிடை நீக்கம்இது தொடர்பாக திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. தாமோதரன் விசாரணை நடத்தி வந்தார்.(நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருமான கபில்குமார் சரத்கார் விடுமுறையில் சென்று உள்ளார்).
இந்த நிலையில் கைதிகளை தப்பிக்க விட்டதற்காக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோன்றஸ் பாபுனி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுககனி, ஏட்டு முருகன் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம்(சஸ்பெண்டு) செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. தாமோதரன் பிறப்பித்துள்ளார்.